நான் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம்: இம்ரான் கான்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய முடியாமல் இரண்டாவது நாளாக காவல்துறையினர் திணறி வரும் நிலையில், ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளனர். நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில், இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இம்ரான் கானை காவல்துறையினர் கைது செய்யவுள்ள தகவலை தொடர்ந்து அவரது வீடு அமைந்துள்ள ஜமான் பூங்கா முழுவதும் நேற்று காலை முதலே கட்சித் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். நேற்று மாலை நூற்றுக்கணக்கான காவலர்கள் இம்ரான் கானை கைது செய்ய வந்த நிலையில், அவர்களை இம்ரான் வீடு அருகே நெருங்கவிடாமல் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 20 மணிநேரமாக காவல்துறையினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர். அதேபோல், இம்ரான் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சித் தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், காவல்துறையினரால் இம்ரான் கானை நெருங்க முடியாததால் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் எனப்படும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கைது நடவடிக்கைக்காக அரசு களமிறக்கியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொண்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வீட்டை நோக்கி ராணுவத்தினரால் சுடப்பட்ட துப்பாக்கி குண்டுகளின் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதேபோல், தான் கையெழுத்திட்ட ஜாமீன் பத்திரத்தை காவல்துறை அதிகாரிகள் ஏற்காமல் கலவரத்தை வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இம்ரான் கானின் கட்சி தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கட்சித் தொண்டர்களை மனித கேடயமாக இம்ரான் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே இம்ரான் கான் தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம். பாகிஸ்தான் மக்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போரிட வேண்டும். என்னை கைது செய்துவிட்டால் நாடு தூங்கிவிடும் என்று அவர்கள் (அரசு) நினைக்கிறார்கள். அதை நீங்கள் தவறு என்று நிரூபிக்க வேண்டும். நான் இல்லாமல் கூட உங்களால் போராட முடியும் என்று நிரூபியுங்கள். கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறார். நான் உங்களுக்காக (மக்கள்) வாழ்நாள் முழுவதும் போராடுவேன் என்று தெரிவித்தார்.

இம்ரான்கானை போலீசார் கைது செய்வதை தடுக்க அவரது தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டுக்கு முன்பு திரண்டிருந்தனர். அவர்கள் இம்ரான் கான் வீட்டை சுற்றி நின்றனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்தனர். திடீரென்று போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. டயர் உள்ளிட்ட பொருட்களை சாலையில் போட்டு எரித்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து இம்ரான் கான் கட்சியினர் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடியடியும் நடத்தினர். இதனால் அப்பகுதி போர்களம் போல் காட்சியளித்தது. இந்த மோதலில் கட்சி தொண்டர்கள் பலர் காயம் அடந்தனர். அதே போல் டி.ஐ.ஜி. உள்பட போலீசாரும் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர். சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகு வன்முறை கட்டுக்குள் வந்தது. இருந்தபோதிலும் தொண்டர்கள் பலர் அப்பகுதியிலேயே சுற்றி வருகிறார்கள். இதையடுத்து இம்ரான் கான் வீடு உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. போலீசார் 8 மணி நேரம் போராடியும் இம்ரான்கானை கைது செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.