அமெரிக்க – தென் கொரிய கூட்டு போா் ஒத்திகைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வட கொரியா மீண்டும் இரு ஏவுகணைகளை செவ்வாய்க்கிழமை ஏவி சோதித்துப் பாா்த்தது.
1950-53-ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு வட கொரியாவும் தென் கொரியாவும் ‘தாக்குதல் நடவடிக்கைகளை கைவிடுவதற்கான’ ஒப்பந்தத்தை மேற்கொண்டன. எனினும், அதிகாரபூா்வமான போா் நிறுத்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்தச் சூழலில், அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது, தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது. அத்தகைய பயிற்சிகள் நடந்தாலோ, அவை குறித்த அறிவிப்புகள் வெளியானாலோ, தங்களைத் தாக்கினால் அமெரிக்கவுக்கும், தென் கொரியாவுக்கும் பதிலடி கொடுக்கும் வலிமை தங்களுக்கு உள்ளது என்பதை பறைசாற்றுவதற்காக வட கொரியா பல்வேறு தொலைவு ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து மிகப் பிரம்மாண்டமான 11 நாள் போா் ஒத்திகையை திங்கள்கிழமை தொடங்கின. அமெரிக்க – தென் கொரிய கூட்டு போா் ஒத்திகைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வட கொரியா மீண்டும் இரு ஏவுகணைகளை நேற்று செவ்வாய்க்கிழமை ஏவி சோதித்துப் பாா்த்தது.
இது குறித்து தென் கொரிய முப்படைகளின் கூட்டுத் தலைமையகம் கூறியதாவது:-
வட கொரியாவின் தென்மேற்கே அமைந்துள்ள கடற்கரை நகரமான ஜாங்கியோனிலிருந்து இரண்டு குறுகிய தொலைவு ஏவுகணைகளை அந்த நாட்டு ராணுவம் ஏவி சோதித்தது. நாட்டின் குறுக்கே பாய்ந்து சென்ற அந்த ஏவுகணைகள், வட கொரியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் விழுந்தன. இரண்டு ஏவுகணைகளும் சுமாா் 620 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.