தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஜெயலலிதாவின் ஆட்சியில் புத்துயிர் பெற்று, பல சாதனைகளை புரிந்து வந்த ஆவின் நிறுவனம், தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற 22 மாதங்களில் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்காலங்களில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளில், தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்றால் என்ன? என்ற நிலை மாறி, இன்று தமிழக மக்கள் குடிக்க பால் இல்லாமல் அல்லலுறும் அவல நிலையை நிர்வாக திறனற்ற ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி விட்டனர். தமிழகம் முழுவதும், குறிப்பாக தலைநகர் சென்னை மக்களில் 99 சதவீதத்தினர் ஆவின் பாலையே நம்பி உள்ளனர். ஆனால், தற்போது 20 முதல் 25 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஆவின் நிறுவனத்தை முடக்கும் வேலையை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. பாலின் தரத்தை குறைத்தது. அதிக அளவு விற்கும் பாலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது. இரண்டாம் ரக பாலின் கொழுப்புச் சத்தை 1 சதவீதம் குறைத்தது. ஆவின் பொருட்களில் தயிர், மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் பவுடர் போன்ற இதர பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, தனியார் நிறுவனங்கள் பயனடைய வழிவகை செய்தது. 50 சதவீதத்துக்கும் மேல் முகவர்களுக்கு பால் வினியோகத்தை குறைத்தது. முக்கியமாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதலை குறைத்தது. இதன் காரணமாக, பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு தங்களுடைய பாலை விற்க தொடங்கினார்கள். இந்த காரணங்களால் இப்போது தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சென்னை நகரில் பால் வினியோகம் அடியோடு சீர்குலைந்து போயுள்ளதால், மக்கள் அநியாய விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் பாலை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். முறையாக, தமிழக மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் ஆவின் பாலை வினியோகம் செய்யாத தமிழக அரசை கண்டிக்கிறேன்.
தி.மு.க. அரசு, தனியார் பால் நிறுவனங்களுடன் ரகசியமாக கூட்டணி அமைத்து ஆவின் நிறுவனத்தை முடக்க நினைக்கிறதோ? என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. ஆவின் நிறுவனத்தை சீரழித்து, மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் போக்கை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். இல்லையெனில் ஆவின் பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் கண்ணீர் இந்த ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் சுட்டெரிக்கும். உடனடியாக பால் கொள்முதலை அதிகரித்து, அனைத்து மாவட்ட பால் உற்பத்தி நிறுவனங்களையும் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது போல் மீண்டும் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பால் தட்டுப்பாடு இல்லாமல் தமிழகம் முழுவதும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.