வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சியின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின. வட மாநில தொழிலாளர்களை தமிழர்கள் குறி வைத்து தாக்குவதாகவும், கொலை செய்வதாகவும் பாஜக நிர்வாகி பொய்யாக பதிவிட்ட சமூக வலைதள பதிவுகள் வேகமாக பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வந்த பீகார் குழு, வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. அதேபோல் பொய்யாக செய்திகள் பகிர்ந்த பாஜக நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டுக்கு வரும் வட மாநில தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்த வேண்டும். வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு, நுழைவுச் சீட்டு வழங்க வேண்டும். வட மாநிலத்தவர்களால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இதுமட்டுமல்லாமல் வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்த நாம் தமிழர் கட்சி சார்பாக அனுமதி கோரப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்துவது தமிழ்நாடு அரசின் அதிகாரத்தின் கீழ் வராது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதேபோல் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் பேரணிக்கு அனுதி வழங்க கூடாது என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.