முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியில் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற ஜெயலலிதாவின் கோஷம் நிச்சயம் செயல் வடிவம் பெறும் வகையில் அதிமுக வெற்றிபெறும். ஏனென்றால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மண்ணை கவ்வும் வகையில் மக்கள் பதில் கொடுப்பார்கள். அதிமுகவுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எந்த தடையும் இல்லை. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.
பின்னர், திருச்சி சிவா எம்பி வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் பற்றிய கேள்விக்கு, பத்திரிகைகளில் குற்றச்சம்பவங்களே அதிகமாக உள்ளது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் சர்வ சாதாரணமாக நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர். அவரது கட்டுப்பாட்டில் கட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை. திருச்சி சிவா துக்கம் தொண்டையை அடைக்கும் அளவிற்கு சோகமாக பேசி இருக்கிறார். கட்சியின் எம்பி-க்கே பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் ரவுடிகளின் சாம்ராஜ்ஜியம் நடந்து வருகிறது. காவல் நிலையத்தில் புகுந்து பெண் காவலரை தாக்கும் நிலை உருவாகியுள்ளது. காவல் நிலையத்தில் புகுந்து தாக்கியவர்களை தற்காலிகமாகவே திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் கட்சியின் தலைவர் கட்டுப்பாட்டில் தொண்டர்கள் இல்லை என்பதையே காட்டுகிறது. அதேபோல் திமுகவில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது.
நெல்லை மாநகராட்சியில் மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதான் திராவிட மாடலா? தந்தையும், மகனும் அதிமுகவின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மாணவர்கள் தேர்வுக்கு வராதது பற்றிய கேள்விக்கு, பிளஸ் 2 பொதுத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை. பெண்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதனால் திட்டம் தோல்வியாக தான் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சீர்கெட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிப்பதிலேயே அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிரமாக உள்ளார் என்று தெரிவித்தார்.