தமிழின் தொன்மையை கீழடி பறைசாற்றுகிறது: தங்கம் தென்னரசு

தமிழின் தொன்மையை கீழடி பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

மதுரை உலகத் தமிழ் சங்க மையத்தில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை நேற்று நடந்தது. அதில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் சார்ந்து 200 கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவ்வை அருள் தலைமை தாங்கினார். கலெக்டர் அனிஷ் சேகர் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், கூடுதல் கலெக்டர் சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) திவ்யான் ஷு நிகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாநகர் தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் தலைநகராக திகழ்கிறது. தமிழுக்கும், மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மூதூர் நகரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக “இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப்பட்டறை” நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு. 7 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையில் தமிழ் இலக்கியம் சார்ந்த ஆர்வலர்கள், வல்லுநர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாட உள்ளார்கள். இலக்கியம் என்றால் பழமை என்ற பொதுவான பார்வை பலரிடம் உள்ளது. தமிழ் இலக்கியங்கள் மூலம் நமது பண்டைய பெருமைகளை நாம் அறியும் அதேநேரத்தில், பல படிப்பனைகளை கற்று எதிர்காலம் குறித்த தெளிவான சிந்தனையை நாம் பெறமுடிகிறது.

தமிழ்ச் சமூகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்தறிவும், படிப்பறிவும் பெற்று கற்றறிந்த சமூகமாக வாழ்ந்தோம் என்பதை கீழடி அகழ்வாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களின் ஆய்வின் அடிப்படையில் நாம் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு தமிழ் சொற்கள் இன்றளவும் சாமானிய மக்களின் பேச்சு வழக்கில் உள்ளது தமிழ்மொழியின் சிறப்பு. திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கு வாழ்வியல் நெறிமுறைகளை கற்பிக்கின்றன. சங்ககாலம் முதல் நிலப்பரப்புகளாக பிரிந்திருந்தாலும் தமிழ்மொழி உணர்வால் நம்மை ஒன்றிணைத்துள்ளது. இந்த உணர்வுதான் “கேரளாவில் பிறந்த நான் எனது தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழ் மொழியை மிகவும் நேசிக்கிறேன்” என்று சொல்ல கூடிய மதுரை கலெக்டரை நாம் பெற்று இருக்கிறோம். தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ள கலைஞர் நினைவு நூலகம் வரலாற்று சிறப்புமிக்க அறிவுசார் நூலகமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.