லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீதும் அமைச்சர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு உள்ளாகியுள்ள அரசு அலுவலகங்களில் கிடைக்கும் ஆவணங்களை கொண்டு அதிகாரிகள் மீதும் துறை அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன.
இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? எத்தனை பேர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்ற பதில் வெளிப்படைத் தன்மை இல்லை.

அரசு துறைகளில் முழுமையாக லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இந்த அரசுக்கு இருக்குமானால், சோதனைக்கு உள்ளான அரசு அலுவலகங்களில் இருந்து கைப்பப்பற்றப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் உயர் அதிகாரிகள், துறைகளின் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.