பறை அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது 100 ஆண்டுகள் கோரிக்கை: ரவிக்குமார்

பறை அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது 100 ஆண்டுகளுக்கு முந்தைய கோரிக்கை என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி கூறியுள்ளார்.

இது தொடர்பாக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி கூறியிருப்பதாவது:-

பறை அடிப்பதைத் தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என நான் விடுத்த கோரிக்கை ஒரு விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. அந்த கோரிக்கைக்கு ஆதரவாகப் பலர் குரலெழுப்பியுள்ளனர். இது நானே சிந்தித்து முன்வைத்த கோரிக்கை அல்ல. ஆதிதிராவிட சமூக்கத்தின் தலைவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்த போராட்டம். அதில் அவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றனர். ஆனால் காலப்போக்கில் ஆதிதிராவிட மக்களிடையே அதை எடுத்துச்சொல்லி வலியுறுத்தாமல் விட்டதால் மீண்டும் அந்த இழிவான வழக்கம் புதிய வடிவங்களில் முளைத்துப் பரவிவருகிறது. இதனால் சிலர் வருமானம் பெறுகிறார்களே. இதைத் தடைசெய்தால் அவர்கள் கஷ்டப்படுவார்களே ‘ என சில பேர் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர், அவர்கள் தன்மானத்தின் மதிப்பை அறியாதவர்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார்: “பாண்டவர்கள் தமது ராஜ்ஜியத்திற்காகப் போரிட்டார்கள். தீண்டாத மக்கள் தங்கள் மனுஸ்கிக்காக (மனிதத்துவத்துக்காக) போராடுகிறார்கள். ஒரு மனிதன் தன் மனிதத்துவத்தை இழந்தால், அவன் அனைத்தையும் இழக்கிறான். ஒரு மனிதன் தனது ராஜ்யத்தை இழந்தால், அவன் குறைந்தபட்சம் தனது மனிதத்துவத்தையாவது தக்க வைத்துக் கொள்கிறான். தங்கள் ராஜ்ஜியத்தை இழந்ததால், பாண்டவர்கள் தங்கள் உயிரை இழந்துவிடவில்லை. ஆனால் தங்களது மனிதத்துவத்தை இழந்ததால் தீண்டாதவர்கள் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே செத்துப்போன பிணங்களாக நடமாடுகின்றனர்” .

நம் முன் உள்ள கேள்வி இதுதான்: ‘நாம் இன்னும் எத்தனை காலத்துக்கு பிணமாக நடமாடப்போகிறோம்? நாம் மனிதர்களா இல்லையா? ‘தன்னை மனிதனாக உணர்பவன் இழிதொழிலை செய்யமாட்டான். சாவு விழுந்தால் இனி பறை அடிக்க எவரையும் அழைக்கமாட்டோம் எனத் தன்மானம் உள்ளவர்கள் முடிவு செய்யுங்கள். இவ்வாறு ரவிக்குமார் எம்பி கூறினார்.