பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடைபெற்ற ஆங்கிலத் தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணத்தை அறியவும், தேர்வு எழுதாத மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி இருந்தார்.
இதனிடையே குறைந்த நாட்கள் பள்ளிகளுக்கு வந்தாலும், தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும், வருகை பதிவேடு விதிகள் தளர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், தற்போது தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு ஆல் பாஸ் செய்யப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு சிறப்பு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் வருகை பதிவேடு 75 சதவிகிதம் இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். வருகை பதிவேடு விதிகள் தளர்வு என்ற தகவல் தவறானது. அப்படி செய்தால் மாணவர்கள் யாரும் பள்ளிகளுக்கு வர மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார். அதில், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் பள்ளிகளில் இருந்து டிசி பெற்றுக் கொள்ளாததால் மாணவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மாணவர்களின் எண்ணிக்கையை கழித்த பின்னர், எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.