இதய நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி இரவு நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை சீரானது. இதையடுத்து அவர் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை சீராக இருக்கிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது சீரான நிலையில் உள்ளது. ஓரிரு நாட்களில் மருத்துவ கண்காணிப்பிற்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.