சமத்துவத்திற்காக குரல் கொடுத்த கன்னட நடிகர் சேதன் குமார் கைது செய்யப்பட்டதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் சேதன்குமார். கன்னட ரசிகர்களால் சேதன் அஹிம்சா என்று அழைக்கப்படும் இவர் தலித் மற்றும் பழங்குடியின ஆர்வலராக அறியப்படுகிறார். சமூக செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டும் சேதன் அஹிம்சா, சேதன் குமார் தனது டுவிட்டரில் பதிவிட்ட ஒரு பதிவு கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, இந்துத்வா பொய்கள் மூலம் கட்டமைக்கப்பட்டது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சேதன் குமார் பதிவிட்டு இருந்தார்.
சேதன் குமார் தனது டுவிட்டர் பதிவில், இந்துத்வா பொய்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராவணணை வீழ்த்தி விட்டு அயோத்தியாவிற்கு ராமர் திரும்பிய பிறகு இந்திய தேசம் தொடங்கியதாக சவார்க்கர் கூறியது பொய். 1992-ல் ராமர் பிறந்த இடம் பாபர் மசூதி என்பது பொய்யான தகவல். உரிகவ்டா – நன்ஜேன் கவ்டா ஆகியோரும் திப்பு சுல்தானை கொலை செய்தவர்கள் என்று 2023ல் சொல்வதும் தவறு. இந்துத்வா உண்மையால் வீழ்த்தப்பட்டது. உண்மை என்பது சமத்துவம்” என்று பதிவிட்டு இருந்தார்.
சேதன் குமாரின் டுவிட் பதிவு கர்நாடகாவில் உள்ள இந்துத்வ அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத நம்பிக்கைகளை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாக பெங்களூரில் உள்ள ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இந்த புகாரின் அடிப்படையில் சேதன் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். சேதன் குமாரை 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க பெங்களுரு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேதன் குமார் சர்ச்சை கருத்துக்களால் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஹிஜாப் வழக்கு விசாரணையின் போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சேதன் குமார் கைது செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த நிலையில், சமத்துவத்திற்காக குரல் கொடுத்த கன்னட நடிகர் சேதன் குமார் என்ற சேதன் அஹிம்ஷா கைது செய்யப்பட்டதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொல் திருமாவளவன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கன்னட நடிகர் சேதன் அஹிம்சா கைது செய்யப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. வெறுப்பு அரசியலை சித்தாந்தமாக கொண்ட இந்துத்வாவிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்ததால் சேதன் அஹிம்சா கைது செய்யப்பட்டுள்ளார். இந்துத்வாவிற்கு எதிரான சமத்துவத்திற்காக சேதன் அஹ்மிசா குரல் கொடுத்தார். சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்த சேதன் அஹிம்சாவை நாங்கள் பராட்டுகிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.