இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது: கமல்ஹாசன்!

இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்; இந்த தொகை வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சில விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி. புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.