சட்டமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புகழ்பாட கூடாது: மு.க.ஸ்டாலின்

‘சட்டமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புகழ்பாட கூடாது’ என்றும், ‘கூட்டத்தொடர் முழுவதும் தவறாமல் பங்கேற்க வேண்டும்’ என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான ‘பட்ஜெட்’ நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து வேளாண் ‘பட்ஜெட்’ நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வருகிற 23-ந்தேதி (நாளை) முதல் 28-ந்தேதி வரை ‘பட்ஜெட்’ மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து 29-ந்தேதி முதல் ஏப்ரல் 21-ந்தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதங்களும் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் மானிய கோரிக்கை விவாத நடவடிக்கைகள் குறித்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

இந்த ‘பட்ஜெட்’ கூட்ட தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எந்தெந்த விவாதங்களில் யார் யார் பேசவேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதேபோல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். மேலும் மானிய கோரிக்கை விவாத நடவடிக்கைகள் குறித்த பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சட்டமன்றத்தில் கண்டிப்பாக புகழ்பாடுவது கூடாது. ‘பட்ஜெட்’டில் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 என்ற மகளிருக்கான உரிமைத்தொகையை யாருக்கு தர போகிறோம்? என்றும், 1 கோடி பெண்களுக்கு தருகிறோம், 2 கோடி பெண்களுக்கு தருகிறோம் என்றெல்லாம் யாரும் பேசக்கூடாது. உங்கள் கோரிக்கைகளை மட்டுமே தான் பேச வேண்டும். அதை செய்யவேண்டும், இதை செய்யவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து பேசக்கூடாது. உங்கள் தொகுதிக்கு என 10 திட்டங்களை கொடுத்துள்ளோம். அதை நிறைவேற்றுவதற்கு முழு முனைப்புடன் செயலாற்றுங்கள். அரசின் நிதிநிலை நல்ல நிலைக்கு வரும்போது மற்ற கோரிக்கைகளை பார்த்து கொள்ளலாம். சட்டமன்றத்தில் பேசும்போது கவனமாக பேசவேண்டும். வார்த்தை தடுமாற கூடாது. ஒருமையில் யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது. நிமிர்ந்து நிற்க வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும். நாம் எதற்கும் அடிபணிய போவது கிடையாது.

எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பணியாற்றி நல்ல பெயரை பெற்றால், அது கட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் நற்பெயரை ஏற்படுத்தும். எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் தவறாமல் வரவேண்டும். அமைச்சர்களை பொறுத்தவரையில், மானிய கோரிக்கை விவாதத்தின்போது தங்களது பதிலை சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறவேண்டும். நீளமான பேச்சை தவிர்த்து விடுங்கள். அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் மற்றும் விவாதங்களில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்று பதில் அளிப்பார்கள். சட்டமன்றத்தில் தேவையில்லாமல் எழுந்து நிற்க கூடாது. இவ்வாறு அவர் அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.