உங்கள் கல்வெட்டு கண்ணில் பட்டால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்: ஜெயக்குமார்!

இன்று எனது பெயர் உள்ள கல்வெட்டை நீங்கள் உடையுங்கள்.. எங்களுக்கும் காலம் வரும்.. உங்கள் கல்வெட்டு கண்ணில் பட்டால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டுள்ளார்.

சென்னையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் உடைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளான் பட்ஜெட் மீதான விவசாயிகளின் மனக் குமுறலை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியுள்ளார். வேளாண் பட்ஜெட்டை பொறுத்தவரையில், அரைத்த மாவையே அரைத்தது போல் உள்ளது. விவசாயிகளின் வளர்சிக்கான புதிய திட்டம் இல்லை. விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்திய பின்னும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிச்சம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை, கடந்த ஆண்டு என்ன இருந்ததோ அதேயே தான் இந்த ஆண்டும் கூறுகிறார்கள். மக்களின் குறையைத் தீர்க்கும் வகையில் பட்ஜெட் அமையவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை திட்டத்தை நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போது அறிவித்துள்ளனர். அனைவருக்கும் ஊக்கத்தொகை என வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற பின்னர் இன்று தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் தருவோம் என அதை குறுக்குகின்றனர். அண்ணா பெயரை எங்கும் உபயோகிக்காமல் தனது தந்தை பெயரையே சூட்ட நினைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். எவ்வளவு தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.. அவர்களுடைய பெயரை ஏன் பெவிலியனுக்கு வைக்கவில்லை? கிரிக்கெட் மைதானம் திறக்க வேண்டும் என்றால் கூட தந்தை பெயரையே சூட்டுகிறார் முதலமைச்சர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை மாறி எங்கும் கருணாநிதி எதிலும் கருணாநிதி என்று நிலை ஆகிவிட்டது.

ஆன்லைன் ரம்மியை திமுக அரசு மறைமுகமாக ஊக்கப்படுத்துவதாக தமிழ்நாட்டு மக்களுக்கு சந்தேகம் உள்ளது. எனது பெயர் உள்ள கல்வெட்டுகளை உடைப்பதாக கேள்விப்பட்டேன். உளி மற்றும் சுத்தியலை எடுத்துக்கொண்டு ஜெயக்குமார் பெயருடன் கல்வெட்டு எங்கே இருக்கிறது எனத் தேடி தேடி உடைத்துக் கொண்டிருக்கிறார்களாம். கல்வெட்டை உடைக்கலாம். மக்கள் மனதில் இருந்து என் பெயரை நீக்க முடியுமா? இன்று நீங்கள் உடையுங்கள்.. காலச்சக்கரம் சுழலும். எங்களுக்கும் காலம் வரும். அப்போது உங்கள் கல்வெட்டுகள் எங்கள் கண்ணில் மாட்டினால் நாங்கள் பார்த்து கொள்கிறோம். இதே நிலைமை தான் உங்களுக்கும். ஒரு கல்வெட்டு கூட இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.