சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க தற்போது நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கும் திட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என்று நடுவண் அரசு தெரிவித்து உள்ளது. தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க முடியாது என்ற முடிவு 11.10.2012-ஆம் நாள் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வில் தான் எடுக்கப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டன. கடந்த பத்தாண்டுகளில் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக மாநில மொழிகளை அறிவிப்பது குறித்த சூழல்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மனநிலையும் வெகுவாக மாறியிருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மாற்றி வெளியிடும் திட்டத்தை 17.07.2019-ல் தொடங்கி வைத்தார். அதன்பின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.இரமணா, 26.11.2021-ம் நாள் அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் பங்கேற்றுப் பேசியபோது, உயர்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்துவதன் மூலம் நீதி வழங்குவதை எளிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். பின்னர் 30.04.2022-ல் டெல்லியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பேசும் போதும், “இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும்” என்று நீதிபதி ரமணா குறிப்பிட்டார். அதே மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியும் உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டை வலியுறுத்தினார்.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான சந்திரசூட்டும் இதற்கு ஆதரவாகவே இருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று 20.01.2023-ம் நாள் அறிவித்த அவர், அதை கடந்த குடியரசு நாள் முதல் நடைமுறைப்படுத்தியும் வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்த போது, இத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதை நம்மில் எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. இப்போது மாறியிருக்கும் காலச்சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தற்போது நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை அனுப்பி பிரதமரையும், மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.