ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் அதன் நிறுவனரும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான ஹரீஷ் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும் கைது செய்ய வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதாமாதம் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக கூறி விளம்பரம் செய்தது. இதன் நிறுவனர் ஹரீஷ் தமிழ்நாடு பாஜக விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர். இதன் மூலம் ரூ.2,438 கோடி பணம் வசூலித்ததாக கூறப்பட்டது. ஆனால், மக்களிடம் வாங்கிய பணத்தை சொன்ன நேரத்தில் திருப்பி வழங்கவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் 14 பேர், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த ஹரீஷை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஹரீஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரோடு மாலதி என்ற ஆருத்ரா நிறுவன நிர்வாகியும் கைதாகி இருக்கிறார்.
இது குறித்து பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-
பொதுமக்களின் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா கோல்ட் மோசடியில் பாஜக அமர் பிரசாத் ரெட்டியின் வலது கரம் பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் ஹரீஷ் கைது. அண்ணாமலை முன்னாள் காவலராக இருந்து தமிழக மக்களை ஏமாற்றிய திருடனுக்கு உதவி செய்துள்ளார். குறிப்பாக பெண்களின் பணம் மற்றும் தங்கம். பதவி கொடுத்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்தவரையும் கைது செய்ய வேண்டும். அண்ணாமலையின் சாதனை போலிமலை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.