அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜகவையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
இது சட்டப்படிதான் நடந்துள்ளது. இதற்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட லட்சத்தீவு எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்தான் ராகுல் காந்திக்கும் தண்டனை விதிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை என தீர்ப்பு வந்தபிறகு மக்கள் பிரதிநிதி அந்த பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழக்கிறார். ராகுல் காந்தியை பொருத்தவரை, சட்டப்படி சபாநாயகர் தகுதிநீக்க உத்தரவை வெளியிட்டிருக்கிறார். ஒரு சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, அதே சட்டம் இந்தியாவின் உச்சபட்ச குடும்பமான காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் பொருந்தும். சட்டத்தின் அடிப்படையில் 30 நாட்கள் அப்பீலுக்கு அவகாசம் உள்ளது. அவர் அப்பீல் செய்யலாம், நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெறலாம். அதற்கான எல்லா நடைமுறைகளும் இருக்கிறது. காங்கிரசைச் சேர்ந்த கபில் சிபல் நேற்று இதுதொடர்பாக விரிவாக பேசியிருந்தார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
பின்னர் தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
பிரதமர் மோடி 9 ஆண்டுகால ஆட்சியை முடித்து பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். தேர்தலுக்காக மட்டும் வாக்காளர்களை குறி வைத்து ஆட்சி நடந்ததை மாற்றியமைத்து மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்கானதாக அமைந்துள்ளது. பெண்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாஜகவின் வெற்றி வாக்கு இயந்திரத்தை கைப்பற்றி நடந்ததாக 2014 இல் சொல்லி வந்தனர். 2019-ல் அரசுத்துறை அனைத்தையும் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றதாக கூறினார்கள். 2024 இல் பாஜக பெரும் வெற்றியை வைத்து மக்களை வசியம் செய்து வெற்றி பெற்றார்கள் என சொல்ல போகிறார்கள்.
தமிழகத்தில் களம் மாறிவிட்டது. 30 ஆண்டுகளாக கூண்டில் இருந்து தற்போது கிளி கூண்டை விட்டு வெளியே வர தயாராகிவிட்டது பறப்பதற்கு சக்தி வந்துவிட்டது. கிளியால் பறக்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்து விட்டது. பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்து விட்டது தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் தயாராகிவிட்டது. நமக்கான நேரம் வந்துவிட்டது. பாஜகவினர் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சி 45 சதவீதத்திற்கும் அதிகமாகவே அரசு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் எங்கு சென்றாலும் இந்தியாவின் உதவியால் ஏராளமான பணிகள் நடந்து வருகிறது. இலங்கை நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்களுக்கான திட்டத்தை இந்தியா செய்து வருகிறது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்வதற்காக உதவிகளை காங்கிரசும் திமுக அரசும் செய்து கொடுத்தது. மோடி அரசு அமைந்த பின்னர் இலங்கையால் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லும் நிலை உருவாகாதவாறு தற்காத்து வருகிறது. இலங்கை என்பது அண்டை நாடு அல்ல தொப்புள்கொடி உறவு.
தற்போது வரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. 2024 ல் மறுபடியும் மோடி தான் ஆட்சிக்கு வரப்போகிறார் வாக்குக்கு பணம் கொடுக்கும் பார்முலாவை முதலில் ஆரம்பித்தது திருமங்கலத்தில் இல்லை தூத்துக்குடியில். வ உ சி காலத்தில் நடந்த சுதேசி கப்பல் இயக்கத்திற்கு எதிராக அதிகமாக பணத்தை வாரி இறைத்து கிழக்கு இந்திய கம்பெனியினர் செயல்பட்டனர். அதுவே முதல் இலவசம். அப்போது தொடங்கியது இன்று வரை நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.