கச்சத்தீவில் சிங்கள கடற்படையினர் அமைத்துள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சிங்கள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது!
கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் ஈழத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்கள் பங்கேற்கின்றனர். அத்திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது. புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சத்தீவை சிங்களமயமாக்கும் செயலாகும். புத்தர் கோயிலுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் அது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும்.
இவற்றையும் கடந்து புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கூட அந்தோணியார் ஆலயத் திருவிழா, அடிப்படை வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு இந்தியா தான் உதவி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.