என்னை தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நிறுத்தவே மாட்டேன்: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. என்னை தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நிறுத்தவே மாட்டேன் என ராகுல் காந்தி கூறினார்.

மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் ராகுல் காந்தியை எதிர்கொள்ள பாஜக பயப்படுவதால் தான் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லியில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் சில வாரங்களுக்கு முன்பு நான் சில கேள்விகள் கேட்டேன். 20 ஆயிரம் கோடி அதானிக்கு சொந்தமான ஷெல் கம்பெனியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் யாருடையது? யார் முதலீடு செய்தனர்? என்ற கேள்விகளை எழுப்பினேன். அதானியின் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் யாருடையது? அதானிக்கும், பிரதமருக்கும் இடையே உள்ள உறவு குறித்து விரிவாக கூறினேன். நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் பேசவும் அனுமதிக்கவில்லை. நாட்டு மக்களின் ஜனநயாகத்திற்கான நான் போராடி கொண்டிருக்கிறேன். தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது. நான் கேள்விகள் கேட்டு கொண்டே தான் இருக்கிறேன் என்றார்.

அப்போது பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ய காரணமாக இருந்த மோடி பெயர் சர்ச்சை தொடர்பான வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்தும், ஓபிசி பிரிவு மக்களை அவமதித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டுவது பற்றியும் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை கேட்ட ராகுல் காந்தி கடும் கோபம் அடைந்தார். இருப்பினும் அவர் அந்த கேள்வியை புறக்கணிக்காமல் ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

இதுபற்றி ராகுல் காந்தி கூறுகையில், ‛‛ஏன் பாஜகவுக்கு நேரடியாக வேலை செய்கிறீர்கள். இதனை வெளிப்படையாக கூட நீங்கள் செய்யலாம். அதாவது நீங்கள் பாஜகவுக்கு பணியாற்ற விரும்பினால் உங்கள் மார்பில் அந்த கட்சியின் கொடியின் சின்னத்தை வைத்து கொண்டு வந்து கேள்வி கேளுங்கள். அப்போதும் இப்போது நான் உங்களுக்கு பதில் அளிப்பேன். பத்திரிகையாளர் போல் நடிக்க வேண்டாம்” என்றார்.

எனக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவே இருக்கும். வயநாடு தொகுதி மக்கள் என் குடும்பத்தை போன்றவர்கள். தகுதி நீக்கம் குறித்து அவர்களுக்கு கடிதம் எழுதுவேன். ஜனநாயகம் குறித்து பேசியதற்காகவும் அவதூறு வழக்கு தொடர்பாகவும் மன்னிப்பு கேட்கலாமே என்கிறார்கள். மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் இல்லை. அதானி பற்றி பேசினால் பிரதமர் பயப்படுகிறார். பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசுதான். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும் நான் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதான் இருப்பேன். நான் நாடாளுமன்றத்திற்குள் இருக்கிறேனோ.. இல்லையா.. என்பது முக்கியம் இல்லை. இந்த தேசத்திற்காக நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.