சட்டம் தனக்கு பொருந்தாது என நினைப்பவர்தான் ராகுல்: அனுராக் தாக்கூர்

ராகுல், தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் பாஜவுக்கோ ஒன்றிய அரசுக்கோ எந்த பங்கும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சி, குறிப்பாக நேரு-காந்தி குடும்பத்தினர், தங்களுக்கு தண்டனை விதிக்க முடியாத தனி இந்திய தண்டனைச் சட்டத்தை விரும்புகிறார்கள். அவர்களுக்கு தனி நீதித்துறை வேண்டும். நிலப்பிரபுத்துவ மனப்பான்மையால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள தவறிவிட்டனர்.

ராகுல் ஒரு வழக்கமான குற்றவாளி. எந்த விளைவுகளையும் சிந்திக்காமல் எதையும் சொல்ல முடியும் என்று அவர் நினைக்கிறார். அவர் எப்போதும் தன்னை நாடாளுமன்றம், அரசு மற்றும் நாட்டிற்கும் மேலாக கருதுகிறார். தற்போது 7 வழக்குகளில் அவர் ஜாமீனில் உள்ளார். ராகுல், தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் பாஜவுக்கோ ஒன்றிய அரசுக்கோ எந்த பங்கும் இல்லை. ராகுலுக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகாததற்கு காங்கிரசுக்குள் ஒரு சதி இருக்கலாம் என கருதுகிறோம். காங்கிரசிலேயே ராகுலை அகற்ற விரும்புபவர்கள் யார்?. இவ்வாறு அவர்கள் கூறினர்.