பாஜகவோ, பாஜக தலைவர்களோ நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட்டது கிடையாது என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இன்று கறுப்புச் சட்டை அணிந்து பங்கேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட எம்பி-க்கள் கோஷங்கள் எழுப்பினர்.
அதேபோல் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு இன்று வந்தனர். அப்போது ராகுலுக்கு ஆதரவாக இருப்போம் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளுடனும், பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் காங்கிரஸ் சட்டசபைக்கு வந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், தடையாணை வாங்கி இருந்த வழக்கை எடுத்து நடத்தி, 24 நாட்களுக்குள் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்று எங்கும் காணாத தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலை. இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கு போட்டவரே தடை வாங்குகிறார். தீர்ப்பு வந்து 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்திருக்கிறார்கள். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்காக தொடர்ந்து போராடுவோம். சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி இருக்கிறோம். இது முழுக்க முழுக்க பாஜக, நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பேசியுள்ளனர். இதற்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதன்பின்னர் சபாநாயகர் அப்பாவு, இரு தரப்பு பேசியதையும் அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதனை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாஜகவினர் நீதிக்கு தலைவணங்கக் கூடியவர்கள். பாஜகவோ, பாஜக தலைவர்களோ நீதிமன்ற தீர்ப்பில் தலையிட்டது கிடையாது. ராகுல் காந்திக்கு அளித்த தண்டனை பற்றி பேசுவதை சட்டசபையில் அனுமதிக்கக் கூடாது. காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை நாடாளுமன்றத்தில் நடந்த விவகாரத்தையும், ராகுல் காந்திக்கு தண்டனை கொடுக்கப்பட்டது குறித்தும் பேசுவதை அனுமதிக்க முடியாது. அவர் பேசும் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற நடவடிக்கை பற்றி இங்கு பேசுவது தேவையில்லாதது. மக்கள் பிரச்சனைகளை பேசாமல் காங்கிரஸ் கட்சியினர் கட்சி பிரச்சனைகளை பேசுவது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.