வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம்!

புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது தொடர்பாக வெள்ளானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கானது சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. புகார் அளிக்கப்பட்டு 90 நாட்கள் கடந்த பிறகும் இதுவரை அந்த வழக்கில் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. மேலும் இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்படவேண்டும் என திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ் கமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளை கடந்த பிறகும் தீண்டாமை கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பட்டியலின மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் விசாரணையானது பெயரளவில் மட்டுமே நடத்தப்படுவதாகவும், தீவிர விசாரணை நடத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி அவையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீஸின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெற்று வருவதாகவும், உயர் அதிகாரிகள் அதனை கண்காணித்து வர்த்தகம் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்று 90 நாட்கள் ஆனா நிலையிலும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி இரு மாதங்களில் அறிக்கை தக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த ஒருநபர் ஆணையத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.