ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: ஹரிஷை பாஜக பாதுகாத்தது ஏன்?: கே.எஸ்.அழகிரி!

ரூ.2400 கோடியை முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த ஆரூத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் ஹரிஷை பாஜக பாதுகாத்தது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது”-

தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு ஊழல் பேர்வழிகள், சமூக விரோதிகள் போன்றோர் தங்களை பாதுகாத்துக் கொள்ள புகலிடமாக பா.ஜ.க.வில் சேர்வது தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைவரும் அறிவார்கள். கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவினரால் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு செயலாளராக இருந்த கே. ஹரிஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரூபாய் 2400 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிற ஆரூத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் தான் கே. ஹரிஷ். இவர் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 210 கோடி முதலீடு பெற்றிருக்கிறார். கே. ஹரிஷ் கடந்த 2022, ஜூன் 2 ஆம் தேதி பா.ஜ.க.வின் விளையாட்டுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பொருளாதார குற்றப்பிரிவு கே. ஹரிஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடிக் கொண்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 2020 முதல் மே 2022 வரை முதலீட்டாளர்களிடமிருந்து டெபாசிட்டாக பெரும் தொகை திரட்டப்பட்டிருக்கிறது. இந்த டெபாசிட் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி, கோடிக்கணக்கான ரூபாயை முதலீடாக திரட்டி மோசடி செய்திருக்கிறார். பொருளாதார குற்றப்பிரிவு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கே. ஹரிஷ் என்பவருக்கு பதவி கொடுப்பதில் பா.ஜ.க.வின் விளையாட்டு பிரிவு தலைவர் எஸ். அமர்பிரசாத் ரெட்டி மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். மோசடி குற்றவாளி முதலீட்டாளர்களை ஹரிஷ் மோசடி செய்துள்ளார் என்று பத்திரிகையாளர்கள் அமர்பிரசாத் ரெட்டியை கேட்ட போது, இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. அவர் விளையாட்டுத்துறையில் மிகச் சிறந்த வல்லவர், அவர் எந்த குற்றத்தையும் நிகழ்த்தவில்லை என்று ஒரு மோசடி குற்றவாளியை பாதுகாக்கிற முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூபாய் 2400 கோடி அளவிற்கு மோசடி செய்த கே. ஹரிஷ் என்பவரை பா.ஜ.க.வில் சேர்த்து, பதவி கொடுத்து பாதுகாப்பதில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், விளையாட்டுத்துறை தலைவர் எஸ். அமர்பிரசாத் ரெட்டியும் இணைந்து செயல்பட்டதில் பின்னணியாக வெளிவருகிற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன. மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை பா.ஜ.க. தலைமை ஏன் கட்சியில் சேர்க்கிறது? ஏன் பாதுகாக்கிறது? மோசடி குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட கே. ஹரிஷ் என்பவருக்கும், தமிழக பா.ஜ.க. தலைமைக்கும் உள்ள உறவு குறித்து விளக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர் அண்ணாமலைக்கு இருக்கிறது. இதற்கான உரிய விளக்கத்தை அவர் வெளியிடுவாரா? மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும் செய்யலாம், எவரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்கலாம் என்ற ஆணவத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.