கச்சத்தீவில் மத கலவரத்தை உருவாக்க புத்தர் சிலை: திருமாவளவன்!

கச்சத்தீவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது; இந்த சிலையை அகற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. 1970களில் மத்திய அரசு தன்னிச்சையாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. இருந்த போதும் கச்சத்தீவு மீதான தமிழ்நாட்டு தமிழர்களின் அனுபவ உரிமையை அங்கீகரிக்கும் ஒப்பந்தமும் உருவானது. ஆனால் இந்த உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. கச்சத்தீவு பகுதிக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் சென்றாலே இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வதும் தாக்குவதுமான போக்கை கடைபிடிக்கிறது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலா திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவில் திடீரென இலங்கை கடற்படை புத்த விகாரையை கட்டி இருக்கிறது. இந்த புத்த விகாரை ரகசியமாக கட்டப்பட்டிருப்பது அம்பலமானது. இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கச்சத்தீவில் ஏற்கனவே அந்தோணியார் தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புத்த விகாரை அமைக்கப்பட்டிருப்பது மத மோதல்களை ஏற்படுத்தும் என்பது தலைவர்களின் கருத்து. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும் தமிழ்நாட்டு தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போது வரையில் அங்கே அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர். இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.