அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டும்: திருமாவளவன்!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நெஞ்சில் நிறுத்தி அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஈபிஎஸ் அரசியல் காய்களை நகர்த்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக வழக்கில் நேற்று உயர் நீதிமன்றம், ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பை அளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததில் சங் பரிவார், பாஜகவின் பின்னணி இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அதிகாரப்பூர்வமான பொதுச் செயலாளராக செயல்படக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை பாஜக தேர்வு செய்திருக்கிறது. இது அவர்களின் அணுகுமுறையில் இருந்து தெரிய வருகிறது. சட்டப்பூர்வமாக அவர்கள் வென்றிருக்கிறார்கள், நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், பாஜக சங்பரிவார்களின் ஆதரவுப் பின்னணியும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தோழமையோடு விடுக்கிற வேண்டுகோள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூகநீதிக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள், சமூக நீதியை பாதுகாத்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அந்த சமூகநீதி கொள்கைக்கு நேர் எதிராக இருக்கக்கூடிய பாஜகவை தூக்கிச் சுமப்பது, எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற மாபெரும் துரோகம். எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களை நெஞ்சிலே இறுத்தி, சமூகநீதிக்கான ஒரு இயக்கமாகவே அதிமுகவை தொடர்ந்து நடத்துவதற்கு துணிந்து முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நானும் சமூகநீதிக்கான போராட்டக் களத்தில் நிற்கிறவன் என்கிற உரிமையோடு இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

பாஜகவை தூக்கிச் சுமப்பது அதிமுகவுக்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல. சமூக நீதிக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றுமேயானால், ஒட்டுமொத்த சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும். மதத்தின் பெயரால் வன்முறைகள் தொடரும். வன்முறையைத் தூண்டுவார்கள். இத்தனை காலம் நாம் காப்பாற்றி வந்த சமூகநீதிக்கான கூறுகள் அழித்தொழிக்கப்படும். ஆகவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி அரசியல் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும், காய்களை நகர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.