கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த இந்து முன்னணியின் மாவட்ட துணை தலைவர் அயோத்தி ரவி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை செய்யும் போது அவரிடம் நாட்டு துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து உதவி மேலாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மேலும் ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் 5 புல்லட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், கடந்த மார்ச் 23ம் தேதி அவரது நண்பரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக வெள்ளலூர் சென்ற போது தவறுதலாக அவர் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியிலிருந்து 2 புல்லட்டுகள் வெடித்ததாகவும். அது அவரது நண்பர் உடலில் பாய்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நாட்டுத் துப்பாக்கியை சென்னையிலிருந்து ஒரு நண்பர் மூலமாக வாங்கியதாக விசாரணையில் தெரிவித்தார். மேலும் அந்த நண்பர் யார்? எங்கிருந்து துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டது என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.