தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை வெட்கக்கேடு: எடப்பாடி பழனிசாமி!

பெரம்பூர் அதிமுக பிரமுகர் கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் கூடுதல் காவல் காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவர் விசாரணைக்கு அழைக்கைப்படும் நபர்களின் பற்களை கட்டிங் பிளேடால் பிடுங்கியதாக அதிர்ச்சி புகார்கள் எழுந்து பகீர் கிளப்பியது. அந்த விவகாரம் தமிழகம் முழுக்க பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக சட்ட ஒழுங்கு தொய்வால் திமுக அரசு மீது கடுமையான விமர்சனம் எழுந்து வரும் நிலையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஓட ஓட சிறுவன் உள்ளிட்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இளங்கோவன் (45) பெரம்பூர் தெற்கு பகுதி கழக செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர் தனது அலுவலகத்துக்கு சென்றுவிட்டு இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்திறங்கிய கும்பல் இளங்கோவனை வழிமறித்து கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக இளங்கோவனை வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது.
இதில் தலை, முகத்தில் பயங்கர வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் விழுந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை சம்பவத்தில் வியாசர்பாடியை சேர்ந்தவர் சஞ்சய் (19), வெங்கடேசன் (30), கணேசன் (23), அருண் (28), 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் என்பவரை அவரது நண்பர்களது முன்னிலையில் இளங்கோவன் அடித்து அசிங்கபடுத்தியதாகவும், கஞ்சா பயன்படுத்துவதை குறித்து தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இளங்கோவனை வெட்டி கொலை செய்ததாக போலீசில் ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் சட்ட ஒழுங்கின் மீது குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

அஇஅதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர்,திரு.இளங்கோ அவர்கள் சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பிரதான எதிர்கட்சியில் முக்கிய பங்காற்ற கூடிய நிர்வாகிக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை நம் மாநிலத்தில் நிலவவுது பெரும் கண்டனத்துக்குரியது. சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு இருப்பது வெட்ககேடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த நாசகார செயலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.