ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கிம் ஜாங் அன் அறிவித்தார்.
வடகொரியாவில் சீன நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் வடகொரியா ராணுவத்தின் 7-வது படை பிரிவினர் எல்லை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் ஹைசன் நகரில் இருந்து திரும்ப தொடங்கினர். அப்போது ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தாங்களாகவே மாயமான துப்பாக்கி குண்டுகளை தேடினர். ஆனால் பல நாட்களாக தேடியும் அவர்களால் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவர்கள் இந்த விஷயத்தை தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து இந்த விவகாரம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர், துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்தார். மேலும் இது தொடர்பான விசாரணைக்கு தீவிரமாக ஒத்துழைக்குமாறு அங்குள்ள தொழிற்சாலைகள், பண்ணைகள், சமூகக் குழுக்கள் மற்றும் சுற்றுப்புற கண்காணிப்பு பிரிவுகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து, ஹைசன் நகரில் வீடு, வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.