ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ரவனீத் சிங், மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதில் லூதியானாவில் மாட்டு வண்டி பந்தயம் பிரபலமாக உள்ள நிலையில், மாட்டு வண்டி பந்தயம் தடை செய்யப்பட்டுள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை அடக்கும் விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளதா என்றும் அவர் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், கிராமப்புற மற்றும் உள்ளூர் விளையாட்டுகள் அல்லது பழங்குடி விளையாட்டுகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையிலேயே இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகம் கேலோ இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதாக தெரிவித்தார். மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளை இந்த திட்டத்திலோ அல்லது விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் வேறு திட்டங்களிலோ அங்கீகரிக்கவில்லை என்றும் இது போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.