அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை செயலாளருக்கு ராகுல் காந்தி கடிதம்!

மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு வழங்கிய பங்களாவை நான் காலி செய்கிறேன் என ராகுல் காந்தி அறிவித்து உள்ளார்.

மோடி பற்றிய அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால். அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அரசு பங்களாவை அடுத்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதிக்குள் காலி செய்யுமாறு மக்களவை செயலகம் அவருக்கு நோட்டீசு அனுப்பியது. இந்த உத்தரவை தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்கிறேன் என ராகுல் காந்தி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் மக்களவை செயலாளருக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு வழங்கிய பங்களாவை நான் காலி செய்கிறேன். 4 முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொது மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன். 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு நான் நடக்கிறேன். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.

அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தியை பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் அவர்கள் செய்வார்கள். அவர் (ராகுல் காந்தி) அரசு பங்களாவை காலி செய்தால் தனது தாயுடன் வசிப்பார் அல்லது என்னிடம் வரலாம். அவருக்காக நான் காலி செய்வேன். ராகுல் காந்தியை பயமுறுத்தும், அச்சுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் மத்திய அரசின் அணுகு முறையை கண்டிக்கிறேன். இது சரியான வழியில்லை. சில நேரங்களில் நாங்கள் 3 முதல் 4 மாதங்கள் வரை பங்களா இல்லாமல் இருக்கிறோம். 6 மாதங்களுக்கு பிறகு எனது பங்களாவை பெற்றேன். பிறரை இழிவுப்படுத்துவதற்காகவே இப்படி செய்கிறார்கள். இத்தகைய அணுகு முறைக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிேறன். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.