பெண் பத்திரிகையாளர்களில் 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்: கனிமொழி!

உலக அளவில் செயல்படும் பெண் பத்திரிகையாளர்களில், 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என, தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்படும், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி பட்டறை, சென்னையில் நேற்று நடந்தது. பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து, தி.மு.க., -எம்.பி., கனிமொழி பேசியதாவது:-

நான் பத்திரிகையில் முதல் முதலாக பணியாற்ற வந்தபோது, செய்தி பிரிவில் பெண்களை பெரிய அளவில் எடுக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், அரசியல் உட்பட, முக்கிய துறைகளில் செய்தி சேகரிக்க முடியாத நிலை இருந்தது. இன்றும் ஊடகத் துறையில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. அரசியல்வாதிகளை நோக்கி உரக்க கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது. அதையும் தாண்டி கேட்டால், அரசியல்வாதிகள், அந்த கேள்வியை தவிர்த்து விடுகின்றனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி, வன்முறைக்கு உள்ளாக்குகிறது. இந்த துறையை விட்டு, விரட்டி அடிக்கப்பட்ட பெண்கள் பலர் உள்ளனர். அதையும் தாண்டி சிலர் தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.

எந்த துறையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், சமூக வலைதளத்தில் முரண்பாடான கருத்தை முன்வைக்கும் போது, எதிர் கருத்துக்கள் படிக்க முடியாதவையாக உள்ளன. ஒரு ஆண் எப்படி தன்னை பற்றிய கருத்தை ஒதுக்கி விட்டு போகிறாரோ, அதேபோல பெண்ணும் ஒதுக்கி விட்டு போக வேண்டும். உலக அளவில் செயல்படும் பெண் பத்திரிகையாளர்களில், 73 சதவீதம் பேர், பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இதை எவ்வாறு சரி செய்யப் போகிறோம் என சிந்திக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினரும், நடிகையுமான கவுதமி, சென்னை தகவல் பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர், கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, அச்சு, மின்னணு, ஊடக துறையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.