தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நெட்வொர்க் 18 குழுமம் சார்பில் தி ரைசிங் இந்தியா என்ற நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி உடனான கலந்துரையாடலில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம். அதிமுகவுடனான கூட்டணி தொடரும்” என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியின் போது, குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியை போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிக்க வைக்க சிபிஐ மூலம் எனக்கு அழுத்தம் கொடுத்தனர். இதையெல்லாம் ஒருபோதும் பாஜக பெரிதுபடுத்தவில்லை. மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல என்று கூறினார்.
பாஜகவின் அதிகார மையமாக இருக்கும் அமித்ஷா அதிமுகவுடன் தான் கூட்டணி என உறுதி செய்திருப்பது அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டுள்ளது.