நீர்நிலைகள் நிரம்பியதால் மராமத்து பணிக்கு இப்போது வேலை இல்லை என்றும், தமிழ்நாடு முழுவதும் 360 இடங்களில் தடுப்பணை கட்ட உள்ளோம் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசியதாவது:-
அதிமுக ஆட்சியிலும் ஏரிகளில் தூர்வாரி இருக்கிறீர்கள். நாங்களும் தூர்வாரி இருக்கிறோம். எல்லா ஏரிக் குளங்களும் இப்போது தண்ணீர் நிரம்பி இருக்கிறது. மராமத்து பணிக்கே இப்போது வேலையில்லை. அதனால் ஏரிகளை, நிலத்தை வைத்து பல்வேறு அடிப்படையில் பிரித்திருக்கிறோம். 360 இடங்களில் தடுப்பணை கட்ட இருக்கிறோம். மாயனூரில் தடுப்பணை கட்டுவதற்கு முன்பு வறண்ட பிரதேசம். ஆனால், இன்று வளம் கொழிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.
நாங்கள் 2009ம் ஆண்டு தாமிரபரணி- நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். இன்று வரை அந்த திட்டம் இழுத்துக் கொண்டே இருக்கிறது. இப்போது ரூ.390 கோடி நிதி ஒதுக்கி பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இடையில் 20 ஆண்டுகள் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டதற்கு யார் காரணம். சரபங்கா திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். நாங்கள் அதை விடவில்லை. குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் திறக்கப்படும். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தையும் முடித்து ஏப்ரல் மாதம் தொடங்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஒரு அரசாங்கம் தொடங்கியதை இன்னொரு அரசாங்கம் செய்ய வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
கோதையாறு பாசன திட்டத்தை புனரமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.2.59 கோடிக்கு தயாரித்துள்ளோம். கோதையாறு பாசனத்தின் கீழ் உள்ள அனைத்து கால்வாய்களும் 3 ஆண்டு காலத்துக்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும். காவிரியில் வீணாக போகும் தண்ணீரை பென்னாகரம் தொகுதிக்கு எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று உறுப்பினர் ஜி.கே.மணி கூறிவருகிறார். அதற்கு ஒரு திட்டம் தயாரிப்பில் இருக்கிறது. நிதி நிலைமை சரியானவுடன் நிச்சயம் அது கவனிக்கப்படும்.
என்னை பொறுத்தவரை, நீண்ட நெடுங்காலம் எங்கள் கட்சியில் இருந்தவன் நான். இன்னும் இருக்கப்போகிறவன். என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். மறைந்துவிட்ட அன்றைக்கு, என்னை புதைக்கின்ற சமாதியில் ஒரு வரி எழுதினால் போதும், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று எழுதியிருந்தால் போதும். என் தலைவர் கலைஞருக்கு கோபாலபுரத்து விசுவாசியாகவே வாழ்ந்தேன். இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக கூறினார். உடனே சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ‘‘இன்னும் 100 ஆண்டுகளை கடந்து வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள். நிச்சயமாக..’’ என்றார்.