மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்: வீரமணி!

மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறினார்.

அரியலூர் மாவட்டம் திராவிடர் கழகம் சார்பாக சமூக நீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் ஆண்டிமடம் கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீலமேகன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் கோவிந்தராஜன், மண்டல செயலாளர் மணிவண்ணன் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். திராவிடர் கழக தலைவர் வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது:-

திராவிடர் கழகம் என்பது சமூக நீதி, சமூக இயக்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் சமூக நீதி சமத்துவம் ஆகிய கொள்கை கொண்டது. தந்தை பெரியார் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறினார். பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்து கொடுக்காமல் மூன்றாவது முறையாக பிரதமராக ஆக வேண்டும் என்று மோடி நினைக்கின்றார். ஆனால் கேட்காமலேயே, பெண்கள் போராட்டக் களத்துக்கு வராமலேயே இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் அந்தந்த ஊர்களில் பெண்களை வெற்றி பெறச் செய்து நாற்காலியில் அமர்த்திய பெருமை இன்றைய முதலமைச்சருக்குதான் உண்டு இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட வேண்டும். நிதிக்கு ஒன்றிய அரசை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது, மாநில உரிமைகளை காத்திட வேண்டும், தொலைநோக்கு கொள்கையில் கொண்ட மக்களை வாழவைக்கும் கொள்கைகள் கொண்ட மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.