சூரியனில் இரண்டாவது முறையாக ‘கொரோனல் ஹோல்’ ஏற்பட்டுள்ளது!

சூரியனில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ‘கொரோனல் ஹோல்’ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சூரியனில் இருந்து மணிக்கு 2.9 மில்லியன் கிமீ வேகத்தில் சூரிய புயல் பூமியை நோக்கிக் கிளம்பியுள்ளது.

பூமி உட்பட நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் அனைத்து கிரகங்களுமே சூரியனைச் சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். நமது பூமியில் நடக்கும் அனைத்து உயிர்களுக்கும் சூரிய கதிர்களே முழுக்க முழுக்க ஆதாரமாக இருந்து வருகிறது. சூரியனில் ஏற்படும் சிறு மாற்றங்களும் கூட இங்கே பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவ்வளவு முக்கியமான சூரியன் குறித்த ஆய்வுகளும் உலகெங்கும் நடந்தே வருகிறது.

இதற்கிடையே இப்போது பரபர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூரியனில் இப்போது மிகப் பெரிய துளை ஒன்று ஏற்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஒரே வாரத்தில் சூரியனில் தோன்றும் இரண்டாவது ‘கொரோனல் ஹோல்’ இதுவாகும். இதன் காரணமாகச் சூரியனில் இருந்து மணிக்கு 2.9 மில்லியன் கிமீ வேகத்தில் சூரிய புயல் பூமியை நோக்கிக் கிளம்பியுள்ளது. இது வெள்ளிக்கிழமை பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நமது பூமிக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதைப் பார்க்கலாம்..

சூரியனில் குறிப்பிட்ட பகுதி கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது பூமியைக் காட்டிலும் 20 மடங்கு பெரியதாக இருப்பது போலத் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்கிருந்து கிளம்பும் அதிவேக சூரியக் காற்று பூமிக்கு அருகில் வரும்போது, ​​அவை பூமியின் காந்தப்புலங்களைப் பாதிக்கிறது. பூமிக்கு ஒரு பாதுகாப்பு அடுக்காகச் செயல்படும் இந்த காந்த மண்டலத்தில் சூரியப் புயல்கள் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. நாளை வெள்ளிக்கிழமை இந்த சூரிய புயல் பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நமது பூமியில் இருக்கும் தொழில்நுட்பங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும், பூமிக்கும் சாட்டிலைட்டிற்கும் இடையே இருக்கும் இணைப்பிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதனால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் ஆய்வாளர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படக் கூடும். பூமியைத் தாக்கும் போது, இந்த சூரிய புயல் மிகவும் வலிமையானதாக இருந்தால்.. தொழில்நுட்பத்தில் ஏற்படும் பாதிப்பைத் தெளிவாக உணர முடியும். நார்தன் லைட்ஸ் எனப்படும் அரோரா என்பது இந்த சூரிய புயலின் தாக்கத்தை நமக்கு வெளிப்படையாகக் காட்டும் ஒரு நிகழ்வாகும்.

சூரியனில் இருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது இந்த அரோரா ஏற்படுகிறது. இவை பூமியின் காற்று மூலக்கூறுகளுடன் ரியாக்ஷனை ஏற்படுத்துகிறது. சூரிய சுழற்சியில் நாம் முடியும் தறுவாயில் இருப்பதால் இதுபோன்ற சூரிய புயல்கள் அதிகம் ஏற்படும். இதன் பிறகு, சூரியன் சற்று அமைதியானதாக மாறும். அதுவரை இதுபோன்ற சூரிய புயல்கள் அடுத்தடுத்து ஏற்படும். இருப்பினும், அவை எவ்வளவு வலிமையாகப் பூமியைத் தாக்கும் என்பதே நமது கவலையாக இருக்கிறது.

இதன் காரணமாக ஏற்கனவே தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் ஷார்ட்வேவ் ரேடியோ அலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஆய்வாளர்கள் அதிக வலிமையான X ரேட்டட் சூரிய புயலாக வகைப்படுத்தியுள்ளனர். இந்த சூரிய புயலானது ஷார்ட் வேவ் சூரிய புயல் மட்டுமின்றி, மின்சார கட்டமைப்பு, ஜிபிஎஸ் சேவைகளையும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுகின்றனர்.

அதிவேகமான மற்றும் அதிக சக்தியைக் கொண்ட ஆற்றலைச் சூரியன் வெளிப்படுத்துவதே இந்த சூரிய புயல். இந்த சூரிய புயல் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ.. அதைப் பொறுத்து பூமியில் பல வித பாதிப்புகள் ஏற்படக் கூடும். இருப்பினும், இதனால் பூமி அழியும் என்று அர்த்தமில்லை. பூமியின் சுற்றுச்சூழலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் கூட இது பூமியின் இருப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பே இல்லை. ஏனென்றால், பூமியைச் சுற்றி நமக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு மண்டலங்கள் இருக்கிறது.