மகளிர் இலவச பயண திட்டத்தை மேலும் விரிவுபடுத்த இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.2800 கோடி கூடுதலாக ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடுதான் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் நேற்று, இயக்கூர்திகள் சட்டங்கள்- நிர்வாகம் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பெண்கள் பயன் பெறும் வகையில் இலசவ பேருந்து பயண திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடி 58 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த ரூ.2800 கோடி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் தவிர மாற்று பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளும் இலவசமாக பயணம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மொத்தம் 15 ஆயிரத்து 489 பேருந்துகள் தான் வாங்கினர். ஆனால் அதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டில் 15 ஆயிரத்து 500 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்தில் கலைஞர் ஆட்சியில் இருந்த போது 48 ஆயிரத்து 298 பேர் நியமிக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டில் அதிமுக ஆட்சியில் 38 ஆயிரத்து 399 பேர் தான் நியமிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. 2000 பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், கும்பகோணம் பேருந்து பணிமனையில் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பணியாளர்கள் 58 வயதில் ஓய்வு பெறும் நிலையில் அவர்களுக்கு வழங்க போதிய நிதி இல்லாத காரணத்தால் அதிமுக ஆட்சியில் பணி ஓய்வு வயதை 60 ஆக மாற்றினார்கள். ஆனால் அதற்கான தொகையை தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு தவணைகளாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். தொழில் ஒப்பந்தங்களை பொருத்தவரையில் அதிமுக காலத்தில் 3 ஆண்டில் முடிக்க வேண்டியவற்றை கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் நீட்டித்து முடிக்காமல் அந்த ஒப்பந்தங்களை முடிக்கவில்லை.
பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தற்போது முடிவுகளை வெளியிட்டுள்ளது. விரைவில் பணி நியமனங்கள் நடக்கும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் தான் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1ம் தேதியில் ஊதியம் வழங்கப்படுகிறது. புதிய பேருந்துகள் வாங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச பயணத் திட்டத்துக்கு ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு டீசல் விலையை ஏற்றிய போதும் டீசல் மானியமாக தமிழ்நாடு அரசு ரூ.2000 கோடி வழங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 16 பணி மனைகள் தனியார் ஒத்துழைப்புடன் நவீனமாக்கப்பட்டு செயல்பட உள்ளன.
SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6-வது முறை பயணம் முதல், 50% கட்டணச் சலுகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துளார்.