முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்: ஓ.பன்னீர்செல்வம்

முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொழி கடந்து மாநிலம் கடந்து பெரியார் நடத்திய சமூக நீதிப் போராட்டத்திற்கான வைக்கப் போராட்டம் குறித்து முதலமைச்சர் எடுத்துக் கூறியுள்ளார் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

வழக்கமாக சட்டப்பேரவையில் எந்தவொரு தீர்மானத்தையும் வரவேற்றுப் பேசும்போது அஇஅதிமுக சார்பில் வரவேற்கிறேன் எனப் பேசும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று அதிமுக என்ற வார்த்தையையே குறிப்பிடாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த நிலையில் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் வரவேற்றுப் பேசினர். முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றுப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பெயரையே குறிப்பிடாமல் பேசிவிட்டு அமர்ந்தார்.

நேற்று கேள்வி நேரத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுப் பேசினார். அப்போது, பெரியார் நடத்திய சமூகநீதி போராட்டங்களில் வைக்கம் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும், மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் ஓராண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் நானும் பங்கேற்கிறேன் என்று அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் அவரவர் கட்சி சார்பாக இந்த அறிவிப்பை வரவேற்றுப் பேசினர். இறுதியில் ஓ.பன்னீர்செல்வம் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது எழுந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொழி கடந்து மாநிலம் கடந்து பெரியார் நடத்திய சமூக நீதிப் போராட்டத்திற்கான வைக்கப் போராட்டம் குறித்து முதலமைச்சர் எடுத்துக் கூறியுள்ளார். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சமூக நீதி காத்த வீராங்கனையாக 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார். அதற்கு அடித்தளமாக விளங்கியது தந்தை பெரியாரின் கொள்கைதான். முதலமைச்சர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு வரலாற்றில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெறும். இதனை தேசிய விழாவாக நமது முதலமைச்சர் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த அறிவிப்பை வரவேற்கிறேன் என பேசி அமர்ந்தார்.

வைக்கம் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை வரவேற்றுப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எந்த இடத்திலும் அதிமுக பெயரை குறிப்பிடாமலேயே பேசிவிட்டு அமர்ந்தார்.