கோவையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் மதுக்கரை பகுதியில் கல்குவாரிகள் நிறைய அமைந்துள்ளன. இந்த கல் குவாரிகளில் இருந்து தினமும், நூற்றுக்கணக்கான லாரிகள் மூலமாக கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக சொல்கிறார்கள். அதேபோல அரசு அனுமதியோடு செயல்படும் சில கல்குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் நிர்ணயத்தை அளவைவிட, அளவுக்கு அதிகமான ஆழமாக தோண்டப்பட்டு கனிம வளம் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் கண்டித்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்றுகூடி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார்களை சொல்லி உள்ளார்கள். இதைதவிர நிறைய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். எனினும், கனிம வளங்கள் கடத்தப்படுவது கொஞ்சமும் குறையவில்லை என தெரிகிறது.
இதனிடையே, கிணத்துக்கடவை அடுத்த முத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் கல் குவாரிகளில் இருந்தும், அனுமதியை பெறாமல், நிறைய கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும், இதற்காகவே, தோண்டப்படும் குழிகளால் அந்த பகுதியில் சுற்றியுள்ள விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றி விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் விவசாயிகள் குமுறி கொட்டி வருகிறார்கள். எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பாக, தனியார் டிவி கேமராமேன் ஒருவர், நேற்று செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் மீது கல்குவாரியில் உள்ள மாபியா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கேமராமேன் படுகாயமடைந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட, அங்கிருந்த விவசாயிகள், சம்பந்தப்பட்ட இடத்துக்கு திரண்டு வந்தனர். அந்த கும்பலிடம் இருந்து கேமராமேனையும் காப்பாற்றினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விவசாயிகள் அவரை அனுப்பி வைத்துவிட்டு, போலீசுக்கும் தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. தாக்குதல் நடத்திய கல்குவாரி ஓனர்கள் சிவப்பிரகாஷ், அவர்களது உறவினர்களான உதயகுமார், முத்துக்குமார் 3 பேர் மீதும் போலீசார் வாக்கு பதிவு செய்தனர். ஆனால், 3 பேருமே தலைமறைவாகி உள்ளதால், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே, கேமராமேன் தாக்கப்பட்ட விவகாரம் தீயாய் பரவியதுமே, கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், எஸ்பி அலுவலகத்திலும், புகார் தந்தனர்
இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதை திமுக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட எண்.10 முத்தூர் கோவை பகுதியில், முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு அதிகளவு கடத்தப்படுவது குறித்து, செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை திமுகவைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டி, ஒளிப்படக் கருவிகளைச் சேதப்படுத்தி, அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமிரில் திமுகவினர் செய்யும் இத்தகைய வன்முறை செயல்களை ஆளும் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதோடு, பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கும்போது உருவாகும் மண் துகள்கள் நிலங்களில் படிவதால் வேளாண்மை செய்ய முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அதிகளவு பாரம் ஏற்றிச் செல்லும் பார உந்துகளால் சாலைகளும் அடிக்கடி சேதமடைவதோடு, அது குறித்துப் புகாரளிக்கும் பொதுமக்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமெனவும், தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது திமுகவினர் நடத்தும் தாக்குதல்களை இனியும் தொடராது தடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதை திமுக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.