டாக்டர் பரிந்துரையில்லாமல் மருந்துகளை எடுக்கவே கூடாது: மா.சுப்பிரமணியன்!

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஊட்டச்சத்து மருந்து, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் சபரிமுத்து என்ற ஆகாஷ். 25 வயதான இவர் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தார். மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகளை பெற்ற ஆகாஷ், மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ள அதீத உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே கடந்த 22ஆம் தேதி ஆகாஷ் உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென ரத்த வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். உடல் வலுவுக்காக ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் உட்கொண்டதால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜிம் மாஸ்டர் ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா தொற்று தீவிரமடைந்ததற்குப் பிறகு இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. அதேபோல், கடுமையான உடற்பயிற்சி காரணமாக மாரடைப்பு சம்பவமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஜிம் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஊட்டசத்து மருந்து, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. அளவுக்கு அதிகமாக பயிற்சி செய்வதும் விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தும். எனவே, மருந்து, மாத்திரையோ, உடற்பயிற்சியோ எதுவாக இருந்தாலும் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.