மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராம நவமி விழாவில் வெடித்த வன்முறை!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி விழா கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஏற்பட்ட வன்முறையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நேற்று ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ராம நவமி நாடு முழுவதும் மார்ச் 30ஆம் தேதி ராம நவமி விழா கொண்டாடப்பட்ட நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் பட்டேல் நகரில் உள்ள கோயில் ஒன்றில் அளவுக்கு அதிகமாக கூட்டம் காரணமாக அந்த கோயிலில் உள்ள பழமையான படிக்கட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்தக் கோர விபத்தில் 12 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா என்ற பகுதியில் உள்ள கோவிலில் ராம் நவமி கொண்டாட்டத்தின்போது தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது சில வட மாநிலங்களில் இரு தரப்புகளுக்கு இடையே மோதல் உண்டாகி ராம நவமி கொண்டாட்டம் வன்முறையில் முடிந்ததால் பதற்றம் நிலவி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் ராம நவமி ஷோபா யாத்திரையின் போது மோதல் வெடித்துள்ளது. ஃபதேபூர் சாலை பகுதியில் ராம நவமி யாத்திரையின்போது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் உண்டானது. இச்சம்பவத்தில் சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேபோல, மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே காசிபாரா பகுதியில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் இறங்கிய கும்பல் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் அட்டூழியம் செய்தனர். வன்முறையை தடுக்கும் நோக்கில் அந்த இடத்தில் போலீஸ் படை அதிகளவில் குவிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் காவல்துறையின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இருதரப்புக்கு இடையிலான மோதல்தான் வன்முறைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த வன்முறையைச் செய்தவர்கள் தேச விரோதிகள், இதன் பின்னால் உள்ளவர்கள் நிச்சயம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. நான் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க மாட்டேன். எப்போதுமே ஹவுராவை பாஜக குறிவைத்து வருகிறது. அனைவரும் அவரவர் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக நிர்வாகி சுவேந்து அதிகாரி, “இந்த வன்முறைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், மாநில நிர்வாகமும்தான் காரணம். இந்த வன்முறையின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.