திமுக ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு தொடர்பாக திட்டப் பணிகளை விரைவுபடுத்த அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தது போல பேசுகிறீர்களே? காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் கலைஞர் தான். அதற்காக முதன்முதலில் கதவணை கட்ட நிதி ஒதுக்கியவர் கலைஞர். நிலம் கையகப்படுத்திய பிறகு கால்வாய் வெட்ட எந்த நடவடிக்கையையும் அதிமுக எடுக்கவில்லை. மற்றவர்கள் சிந்திக்காதது போல பேசுகிறீர்களே என அமைச்சர் பேசிய போது அவையில் சிரிப்பலை உண்டானது. திமுக ஆட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும்.
கால்வாய் வெட்டும் பணிகளுக்கு ரூ.177.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 64% பணிகள் முடிவடைந்துள்ளன. கால்வாய் வெட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 2023-24ம் ஆண்டில் கால்வாய் வெட்டும் பணிக்காக ரூ.111.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.