தமிழகத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்: மா.சுப்பிரமணியன்!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று நடந்த தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையங்களில் கண்காணித்து 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே நாளில் மாநில சுகாதார பேரவையை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். மாநிலத்துக்கென ஒரு சுகாதாரப் பேரவை இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் பார்த்தால், தாய்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகளில் இதுபோன்ற பேரவை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும், பரவல் அதிகரிப்பதை தவிர்க்க சில நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டியுள்ளது. அந்த வகையில், நாளை(இன்று) முதல் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்லும் அனைவரும் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த அறிவிப்பால் பதட்டம் அடையத் தேவையில்லை. கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம். எனவே, முக கவசம் நடைமுறையை முதலில் மருத்துவமனையில் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.