சென்னை எல்ஐசி கட்டடத்தில் மேல்மாடியில் பற்றி எரிந்த பெயர் பலகை!

சென்னை அண்ணா சாலையில் வானளவு உயர்ந்த 15 மாடி கொண்ட எல்ஐசி கட்டடம் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை திடீரென்று எல்ஐசி கட்டத்தின் மேல் மாடியில் பெயர் பலகை தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அண்ணாசாலையின் பழம்பெருமை வாய்ந்த எல்ஐசி கட்டடம் உள்ளது. சென்னையின் அடையாளமாக உள்ள கட்டடம் 15 மாடிகளை கொண்டது. இந்த கட்டடம் தான் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தெற்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. 1959ல் 12 தளங்களுடன் இந்த கட்டம் கட்டப்பட்டது. அப்போது இது தான் இந்தியாவின் மிகப்பெரிய கட்டம் என பெயர் பெற்றது. அதன்பிறகு இந்த கட்டடத்தில் புதிதாக 3 தளங்கள் கட்டப்பட்டன. தற்போது இந்த கட்டடம் மொத்தம் 15 மாடிகளை கொண்டுள்ளது. சென்னை நகரில் இன்றும் கூட அண்ணாசாலையின் அடையாளமாக இந்த எல்ஐசி கட்டம் நிமிர்ந்து நிற்கிறது. இந்த கட்டத்தின் மேல்புறம் எல்ஐசி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இன்று மாலை திடெீரென்று மேல்மாடியில் வைக்கப்பட்டு இருந்த எல்ஐசி பெயர் பலகை தீப்பற்றி எரிந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நவீன தீயணைப்பு வாகனங்களுடன் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு போராடி தீயை அணைத்தனர். வால்வோ ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் மூலம் தீ விரைவாக அணைக்கப்பட்டது. இருப்பினும் கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள பெயர் பலகை எப்படி தீப்பற்றி எரிந்தது? என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை துவங்கி உள்ளது.