இனிமேல் எவராலும் அதிமுகவை தொடவும் முடியாது.. சீண்டவும் முடியாது: எடப்பாடி பழனிசாமி!

இனிமேல் எவராலும் அதிமுகவை தொடவும் முடியாது.. சீண்டவும் முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அதிமுகவில் நிலவிய கூச்சல் குழப்பங்கள் தற்காலிகமாக அடங்கி இருக்கின்றன. இரட்டை தலைமைக்கு முடிவுகட்டி, அதிமுகவின் சர்வ அதிகாரமும் படைத்த ஒற்றைத் தலைமையாக உருவெடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியின் இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றதை அடுத்து, முதன்முறையாக தனது சொந்த ஊரான சேலத்துக்கு புறப்பட்டார். சட்டசபை 3 தினங்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்காக, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் இருந்து சேலம் வரை ஆங்காங்கே அதிமுக தொண்டர்கள் வழிநெடுக திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவ்வாறு செல்லும் போது, விழுப்புரத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவர் பேசியாவது:-

சோதனைகளை தொடர்ச்சியாக சந்தித்து சாதனை படைக்கும் கட்சிதான் அதிமுக. அதிமுக வரலாறே இதுதான். அதிமுகவை உருவாக்கிய போது எம்ஜிஆர் சந்திக்காத சோதனைகளா.. அவரது மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்தி செல்ல ஜெயலலிதா சந்திக்காத சோதனைகளா.. அந்த சோதனைகளை அவர்கள் எப்படி கடந்து வந்தார்களோ, அப்படிதான் தற்போது நாமும் சோதனையை கடந்து வெற்றிக் கண்டுள்ளோம். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான் அதிமுக. அந்த தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்குவேன்.

எம்ஜிஆர் ஜெயலிதாவின் வாரிசுகளே நாம்தான். அவர்கள் வழியில் செயல்பட்டு தமிழக மக்களுக்கு நல்லது செய்வேன். நம்முடன் இருந்து கொண்டே சிலர் எதிரியாக செயல்பட்டு வந்தனர். காலம் அவர்களை அடையாளம் காட்டியது. அவர்கள் தற்போது பி டீமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை பற்றி நாம் கவலைப்பட தேவை இல்லை. திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருவதை நான் அறிவேன். எதற்கும் நீங்கள் கவலைப்படாதீர்கள். அந்த வழக்குகளை எல்லாம் நாம் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் நாம் சந்திப்போம். வழக்குகளுக்கு பயந்தவர்கள் அதிமுகவினர் கிடையாது. அதிமுகவை எவராலும் சீண்டவும் முடியாது.. தொடவும் முடியாது.. வழக்குகள் அனைத்தும் கானல் நீராக போய்விடும். வரும் மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடக்கலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் நிச்சயம் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடிக்கும். எனவே தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுங்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.