பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது. தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது. இந்த நிலையில் தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது. செயற்கைகோளை விண்ணில் நிலை நிறுத்த கொண்டு செல்லும் ராக்கெட்டின் பாகம் விண்வெளியில் சுற்றும் அல்லது கடலில் விழும். மேலும் வெடித்து சிதறும் வாய்ப்பும் உள்ளது. செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டை மீண்டும் பூமியில் தரையிறங்கும் ஆய்வில் இஸ்ரோ ஈடுபட்டது. 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வந்த நிலையில் விண்ணில் இருந்து ராக்கெட் பூமியில் தானாக தரையிறங்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ, இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து இச்சோதனையை கர்நாடக மாநிலம் சித்ர துர்காவில் உள்ள ஏரோ நாட்டிகல் டெஸ்ட் ரேஞ்ச் மையத்தில் நடத்தப்பட்டு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்ட ராக்கெட், 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து விடுவிக்கப்பட்ட ராக்கெட் ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறக்கியது. விஞ்ஞானிகள் நிர்ணயித்த இலக்கின் படி ராக்கெட் தரையிறக்கியது. இதன் மூலம் இச்சோதனை வெற்றி பெற்றது. செயற்கைக் கோள்களை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்திய பின் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து உள்ளது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் மூலம் செலவு குறையும். கால விரயம் தடுக்கப்படும். மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ முந்திய மைக்கல்லை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்து இஸ்ரோ கூறும்போது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனம் என்ற கனவு யதார்த்தத்திற்கு இந்தியா ஒரு படி நெருக்கமாக வருகிறது. மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணைகளை தயாரிப்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது. சோதனை முடிந்த பிறகு மென்பொருள் தரையிறங்கும் கருவி சரிபார்ப்பு, ஓடு பாதையில் உள்ள உத்தேச இடத்துக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான சென்சார் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.