வரும் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, முதல்முறை தனது சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை வருகை புரிந்தார். அப்போது மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மணி மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சி தொண்டர்கள் அனைவரும் மிகவும் எழுச்சியுடன் இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை அதிமுக, பாஜக கூட்டணி குறித்து முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள தேசிய தலைவர்கள் தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தான் கூட்டணியை முடிவு செய்வர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது பற்றி டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வரும் என எதிர்பார்க்கிறோம். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்திலிருந்து இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு இணைவது அவரவர் ஜனநாயக உரிமை.
அதிமுகவை தொடங்கும் போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் எவ்வளவு சோதனைகளை சந்தித்தார் என்று அனைவருக்கும் தெரியும். அவரது மறைவிற்கு பின்னர் இதய தெய்வம் ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை சந்தித்தார். இதேபோல் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிமுக சோதனைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறது. இறுதியில் வெற்றி பெற்றுவிட்டது.
இன்றைக்கு எதிர்கட்சிகளே இருக்கக் கூடாது என திமுக அரசு நினைக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் அதிமுக ஒரு போதும் அஞ்சாது. காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. அதேபோல மின் தடையும் ஆரம்பமாகிவிட்டது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்தடை என்பது தவிர்க்க முடியாது. அந்த அளவிற்கு ஆட்சியின் அவலம் இருக்கிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
முதியவர்கள் தனிமையில் இருப்பவர்களை குறிவைத்து கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும், மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் போதை பொருட்களால் சீரழியும் சம்பவங்களும் அதிகரித்து விட்டன. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதற்கெல்லாம் முடிவு கட்ட வரும் மக்களவை தேர்தலில் 40க்கு 40 என வெற்றி வாகை சூடுவோம். அதற்காக அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு பாடுபட வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமியை கட்சியின் நிர்வாகிகள் சாரை சாரையாக சென்று சந்தித்து வருகிறார்கள். கட்சியினர் கூட்டம் அலைமோதுவதால் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர் சேலம் புறப்பட்டு சென்றதோடு, ஆட்டுக்கிடாய், நாட்டுக்கோழிகள், தட்டு தட்டாக சீர்வரிசைப் பொருட்கள், பழக்கூடைகள் என வண்டி வண்டியாக கொண்டு சென்று இறக்கினர். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி இல்லம் அமைந்துள்ள சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் போக்குவரத்தே ஸ்தம்பிக்கும் அளவுக்கு நிலைமை போனது. இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட கூட்டுறவு இளங்கோவன், கட்சியினரை எடப்பாடி பழனிசாமியை பார்க்க அனுப்பி வைத்தார். 7 வகை பழங்கள் சீர் வரிசைத் தட்டுகளில் இடம்பெற்றிருந்தன. எப்போதுமே எதையுமே வித்தியாசமாக செய்யக்கூடிய சி.விஜயபாஸ்கர் இந்த விவகாரத்திலும் வித்தியாசமாக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை மனதை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் கட்சியினர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.