ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன்?: ப.சிதம்பரம்

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது; 1 ஆண்டு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது; ஆனால் திடீரென 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.

காரைக்குடியில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறியதாவது:-

2019-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் கோலார் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அந்த தேர்தல் கூட்டம் முடிந்த பின்னர் ராகுல் காந்தியிடம் நிருபர்கல் கேள்வி கேட்டனர். அப்போது ராகுல் காந்தி ஒரு வாசகத்தை சொல்கிறார். இது நடந்தது கர்நாடகா மாநிலம் கோலாரில். 3 நாட்கள் கழித்து ஏப்ரல் 16-ந் தேதி புர்னேஷ் மோடி என்பவர், குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடர்ந்தார். கோலாருக்கும் சூரத்துக்கும் என்ன சம்பந்தம்? பேசியது கர்நாடகா மாநிலம் கோலாரில்.. வழக்கு தொடர்ந்தது குஜராத் மாநிலம் சூரத்தில். 2019 ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்த வழக்கு, ஏறத்தாழ 2 ஆண்டுகள் 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தன. 2019-ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை இவ்வழக்கு கிடப்பில் இருந்தது. இவ்வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்; அவருக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்றெல்லாம் இந்த புகார்தாரர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு சென்று என்னுடைய வழக்கை விசாரிக்கக் கூடாது என்கிறார் புகார்தாரர். இதை ஏற்று குஜராத் உயர்நீதிமன்றம், சூரத் வழக்கை விசாரிக்க தடை விதிக்கிறது. 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி வரை இந்த தடை நீடிக்கிறது.

இடையில் சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதி வருகிறார். 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும் போது, பிரதமர் மோடி மீதும் ஒரு நிறுவனம் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் எடுத்து சொல்கிறார். இதில் 90% சபை குறிப்பில் இருந்து சபாநாயகரால் நீக்கப்பட்டுவிட்டது. ராகுல் காந்தி உரையாற்றிய பின் 9 நாட்களில் குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு சென்ற புர்னேஷ் மோடி, தம் வழக்கின் மீதான தடையை நீக்க சொல்கிறார். 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த, 1 ஆண்டு தடையில் இருந்த வழக்கை உடனடியாக விசாரிக்க கோருகிறார் புர்னேஷ் மோடி. இதனை ஏற்று குஜராத் உயர்நீதிமன்றமும் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் பிப்ரவரி 21-ந் தேதி தொடங்குகிறது. மிக சரியாக 30 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்து மார்ச் 23-ந் தேதி தீர்ப்பு அளித்து மார்ச் 24-ந் தேதி தகுதி நீக்கம் செய்கின்றனர்.

ராகுல் காந்தி வழக்கு ஏன் 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது? ஒரு ஆண்டு ஏன் தடை வித்க்கப்பட்டது? தடையை அவசரம் அவசரமாக நீக்கி விசாரணை ஏன் தொடங்கப்பட்டது? விசாரணையை ஏன் 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்? எந்த கிரிமினல் வழக்கு 30 நாட்களில் முடிந்துள்ளது? இதற்கு முன்னர் சூரத் நீதிமன்றத்தில் ஒரு அவதூறு வழக்கு கூட இல்லையா? இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.