காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு ஒருபோதும் அரசு அனுமதி அளிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி ஏலம் எடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சி எம்.எல்.ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
டெல்டா பகுதியில் மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் பேசினேன். இதையடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினேன். அந்த கடிதத்தின் நகலை டி.ஆர்.பாலுவிற்கு அனுப்பி சம்பந்தப்பட்ட அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேரில் சந்தித்து அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். இந்த துறை சார்ந்த அமைச்சர் வெளியூரில் இருக்கிறார். இதனால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு டி.ஆர்.பாலு பேசினார். முதல்வராக மட்டுமல்ல, நானும் டெல்டாக்காரன் தான். எனவே இதில் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் அந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. அளிக்காது. அளிக்காது என்று கூறினார்.
முன்னதாக பேரவையில் பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
தமிழகத்தின் மிகவும் முக்கியமான உணவு உற்பத்தி மண்டலமாக காவிரி டெல்டா விளங்குகிறது. இந்த சூழலில் மத்திய அரசின் நிலக்கரி துறை அமைச்சகம் வாயிலாக பழுப்பு நிலக்கரி எடுக்கும் ஏல அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக அரசிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இதை கருத்தில் கொண்டு மேல் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பிக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசிய போது 2006ஐ பற்றி குறிப்பிட்டு சொன்னார். அதில் ஆழமாக செல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் கொண்டு வந்த சட்டத்தில் எதையெல்லாம் விட்டு விட்டு கொண்டு வந்தீர்கள் என்பதை மனசாட்சியோடு நினைத்து பார்க்க வேண்டும். வானதி சீனிவாசன் பேசிய போது தனியாருக்கு தாரை வார்ப்பது பற்றி எல்லாம் பேசினார். ஆனால் அம்பானிக்கும், அதானிக்கும் மத்திய அரசு என்னவெல்லாம் செய்து கொடுத்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
பாஜக எல்லாம் திமுகவிற்கு பாடம் எடுக்க வந்துவிட்டதா? என்ற எண்ணத் தோன்றுகிறது. முதல்வரின் சார்பில் ஒரு விஷயத்தை தெளிவாக கூறி விடுகிறேன். எந்த காலத்திலும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் ஒருபோதும் இத்தகைய திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது என்று தங்கம் தென்னரசு கூறினார்.