ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக மட்டும் தான்: எடப்பாடி பழனிசாமி!

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், ஓபிஎஸ் அவ்வப்போது கழக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை அடுத்து முதன் முதலாக எடப்பாடி பழனிசாமி கோவைக்கு வருகை தந்தார். அப்போது, காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவினர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

திமுகவில் ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள். திமுக ஒரு கம்பெனி போல் செயல்பட்டு வருகிறது. அதிமுக பொற்கால ஆட்சியை கொடுத்தது. ஆனால் இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும் தான். அதிமுக கொண்டு வந்த நிறைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவது மட்டும்தான் ஒரே வேலையாக முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். அதிமுக ஆட்சியில்தான் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அவிநாசி சாலையில் 10 கிலோமீட்டர் நான்கு வழிச்சாலை மேம்பாலம், கோவை முதல் பொள்ளாச்சி 40 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை கொண்டு வந்தோம். திமுக எந்த புதிய திட்டத்தையும் கோவைக்கு அறிவிக்கவில்லை. தமிழகத்திலேயே 10 தொகுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த மாவட்டம் கோவை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.