பிரதமர் நரேந்திர மோடி தன்னை பழிவாங்காமல் அரசியல்வாதியாக நடந்துகொண்டார் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் ஜனநாயக ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தினருக்கு அடுத்து அதிக செல்வாக்கு மிகுந்த நபராக இருந்து வந்த அவர் அக்கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு காந்தி குடும்பமே காரணம் என்று கூறி போர்க்கொடி தூக்கினார் குலாம் நபி ஆசாத். அவரை தொடர்ந்து பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அணிவகுத்தனர். இப்படி காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே செயல்பட்ட அதிருப்தி குழுவான ஜி 23 க்கு குலாம் நபி ஆசாதே தலைமை தாங்கினார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு குலாம் நபி ஆசாத் விலகி, “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி சொல்கிறேன். ஏனெனில் ஜம்மு காஷ்மீருக்கான 370 வது சிறப்பு சட்டப் பிரிவு ரத்து, குடியிரிமை திருத்த சட்டம், ஹிஜாப் போன்ற பல்வேறு விவகாரங்களில் நான் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அவற்றை எல்லாம் எதிர்த்து குரல் எழுப்பி இருக்கிறேன். அதன் காரணமாக சில மசோதாக்கள் நிறைவேறாமல் தோல்வியும் அடைந்தன. ஆனால், பிரதமர் மோடி என்னை பழிவாங்கவில்லை. அவர் ஒரு அரசியல்வாதியாகவே நடந்துகொண்டார். அந்த பெருமை அவருக்கு உள்ளது.
காங்கிரஸ் தலைமைக்கு எதிராக செயல்பட்ட ஜி 23 குழுவின் தலைவர்களில் நான் மட்டும்தான் புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில்தான் இன்னும் அங்கம் வகித்து வருகிறார்கள். ஜி 23 தலைவர்களின் பின்னால் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக சொல்வது முட்டாள்தனம். அவர்கள் பின்னால் பாஜக இருக்கிறது என்றால் ஏன் அவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கப்படுகிறார்கள்? இவை எல்லாமே சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டு. இவ்வாறு அவர் கூறினார்.